Sunday, February 24, 2008

மழை முடிந்த...

மழை முடிந்த மாலை நேரம்
என் இதயம் நனைக்கும் தென்றலில்
கையில் சிவப்பு ரோஜாக்களுடன்
உனக்காக காத்திருக்கிறேன்.

காற்றில் அலைந்தபடி விழுகிறது
ஒற்றை இலை
உனது கல்லறை மீது.

இன்னும் தூறல் நிற்கவில்லை
எனது நம்பிக்கை போலவே.

ஏதோ நடக்கப்போவதாய்...

ஏதோ நடக்கப்போவதாய் உணர்ந்தேன்.
என் மீசை துடித்தது.
இமைகள் படபடத்தன.
இதயம் கணமானது.
ஜன்னல் கதவுகள்
அறைந்து கொண்டன.
காற்று சுழன்றடித்தது.
மேகங்கள் திரண்டன.
வானம் இருண்டது.
அடுக்களையில்
என்னவள்
சமைக்க அரம்பித்திருக்கிறாள்,
முதன் முறையாய்... :)

Monday, February 18, 2008

உன் கூந்தல் கலைக்கப்படுகிறது...

உன் கூந்தல்
கலைக்கப்படுகிறது...
நீ சூடிய பூக்கள்
உதிர்க்கப்படுகின்றன...
உன் சேலையும் நழுவுகிறது...
நீயும்
எதிர்க்க முடியாமல்
தோற்றுப்போகிறாய்.
பலமாக வீசுகிறது காற்று!

Sunday, February 10, 2008

பிழைப்பு

சிவந்துவிடாதிருக்க
நான்
மஞ்சளிட்டுக்கொள்கிறேன்...

என் இதழ்களை
ஈரமாக்கிக்கொள்கிறேன்...

எனது கண்களில்
மையிட்டுக்கொள்கிறேன்...

கதவின் ஓசை கேட்டு
மிரண்ட வெட்கத்தை
கண்மூடி இருக்கச் சொல்லிவிட்டு
முதன் முறையாய் தாழ் திறக்கிறேன்.
வெளியே...யாரோ!

இரண்டு சாமம் முடிந்து
மூன்றாவதாய் கதவு திறக்கையில்
வெட்கம்
இருட்டறையின் மூலையில்
கண்ணீர் கறையுடன்
உறங்கிவிட்டிருந்தது...

மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்
காலையில் வீடு திரும்புகையில்
இனிப்பு வாங்கிச் செல்லவேண்டும்!
தலைக்கு நானூறு வீதம்
நேற்று இரவு
எனது முதல் நாள் சம்பளம்
ஆயிரத்து இருநூறு ரூபாய்...!

எனக்கான காத்திருப்பில்...

எனக்கான காத்திருப்பில்
உன் கன்னம் கடந்தக் கண்ணீர்
நம் காதலின்
பாரம் சுமந்து
பூக்களின் மீது விழும்போது
எழுந்த காற்று
தூரத்தில் என்னிடம்
உனது தனிமையை
அழுதுவிட்டுச் சென்றது...

மழைத்துளி விழுந்தாலும்
வாசம் தராத
போர்க்களத்தின் பாசறையில்
கறை படிந்த வாட்களோடும்
தீர்ந்து போன
உன் வாசத்தோடும்
சுகித்திருக்கிறேன்...

உன் தனிமையும்
கண்ணீரும்
தீரும்முன்
உன் கூந்தலில் சூட
வாகையோடு வருகிறேன்...

அதுவரை
தேயும் நிலவினை விடுத்து
கண்ணே
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரு!

எப்படி அறிகிறாய்...

எப்படி அறிகிறாய்
எனது வருகையை?
வாசல் நுழையும் முன்னே
கதவு திறக்கிறாயே?

எப்படி அறிகிறாய்
எனது பசியை?
சமையலறை நுழையும் முன்பே
சகலமும் தயாராய்!

எப்படி அறிகிறாய்
எனது கவலைகளை?
தொலைபேசியில் தயாராய்
உன் ஆறுதல் வார்த்தைகள்!

எனது சந்தோசங்களையும்
நான் சொல்லும் முன்பே
உன் அன்பு முத்தங்களுடன்
பகிர்ந்து கொள்கிறாய்!

நாம் பேசும்போதெல்லாம்
என் இதயம் கடக்கும் முன்பே
என் வார்த்தைகள்
உன் இதழ் கடக்கின்றன!

உன் மீதான
என் கோபங்களை
ஆறுதல்படுத்தி
என்னிடமிருந்து வழியனுப்பும்
உன் விழிகள்!

நம் கனவுகளில் கூட
எப்போதுமே நாம்!

எப்படி மறந்தாய்
இப்போது மட்டும்?
உன் நரைத்த முடி காற்றில் ஆட...
உன் சுருக்கம் விழுந்த கைகள்
என் கைகளை பற்றி இருக்க...
உன் புன்னகை முகமும்
எனை பார்த்தபடி இருக்க...
நீ இறந்து
இரண்டு வினாடிகள் ஆயிற்று!

மழை பெய்துகொண்டிருக்கிறது...

மழை பெய்துகொண்டிருக்கிறது...

வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டு
அரைகுறையாய் நனைந்தபடி
காகிதப் படகுகள் செய்து
அவைகளுக்கு
வெள்ளத்தில்
நீந்த கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

இரண்டு வீடுகள் தள்ளி
உன்மேல் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளிகளை ரசித்துக்கொண்டே
நீந்தி வரும்
காதல் கடிதங்களை
சேமித்தபடி நான்...!

ஆடைகள் வேண்டி...

ஆடைகள் வேண்டி
வானம் நோக்கி தவம் செய்கின்றன
முன்பனி காலத்து
நிர்வாண மரங்கள்...

பனிக்காலத்து இரவுகளில்
வெட்கம் பூசிய உன் கண்கள்
என்னை நோக்கி தவம் செய்கின்றன
என்னையே வேண்டி...

மகிழ்ந்த வானம்
பனியால் மூடத்தொடங்குதிறது
மரங்களை...

நானும்...

அரங்கமே...

அரங்கமே
என் சிதார் இசையைக் கேட்க
காத்துக்கொண்டிருக்கிறது…

என் சிதாரின்
ராகமாலிகையோ
உன் கொலுசொலியை கேட்டு
உன் காலடியிலேயே
மயங்கிக்கிடக்கிறது…

நான்
இதழ்களால்
உனை கெஞ்சுகிறேன்...
நீ
இமைகளால் புன்னகைக்கிறாய்...

என் சிதார்
இசைக்கத் தொடங்குகிறது...

சிதார் இசை...

சிதார் இசை கேட்கும் போதெல்லாம்
உன்னை பார்க்கிறேன் நான்...

நான் உன்னை பார்க்கும் போதெல்லாம்
நிலம் பார்க்கிறாய் நீ...

நீ என்னைப் பார்க்கும் போதெலாம்
என் இதயம்
சிதார் இசைக்கத் தொடங்கிவிடுகிறது...

இப்படியே
முடிவிலியாக போய்க்கொண்டிருக்கிறது
உன் வெட்கமும்
நம் காதலும்...

அந்த அழகான ஓவியங்களுக்கு...

அந்த அழகான ஓவியங்களுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
யோசித்து கொண்டிருக்கும்போதே

கடல் அலை ஒன்று
என் அனுமதி இல்லாமல்
அபகறித்துச் சென்றது
உன் கால் தடங்களை...

கோபித்த என்னிடம்
கூறிவிட்டுச் சென்றது...

இனிமேல்
உன் கால் தடங்கள் இல்லாத
கடற்கரைக்கு
அவை வருவதில்லையாம்!

வழக்கம்போல...

Comment from my friend for the previous poem:
நல்ல கவிதை...
Suggesstion: தென்றலை தவிர்க்க எதாவது கண்ணாடி கூண்டில் அடைத்து வைக்கவும் :)...
அதற்கு பதில், கீழே

வழக்கம்போல
உன்னை சந்திக்க வந்திருக்கிறது
வண்ணத்துப்பூச்சி ஒன்று...

கூண்டிற்கு வெளியே
அதன் சிறகுகளும்...
உள்ளே
உனது விழிகளும்...
படபடத்துக் கொண்டிருக்கின்றன!

அழகே...
நீயே சொல்
யாரை அனுமதிப்பதென்று...
தென்றலயா?...வண்ணத்துப் பூச்சியையா?

குல்மொகர் மலர்கள்...

குல்மொகர் மலர்கள் நிறைந்த சாலையில்
நீ நடந்து செல்கிறாய்...

மரத்தினின்றும் உதிரும்
அந்த செந்நிற மலர்கள்
உன்னை காயப்படுத்தி விடக்கூடாதென்று
பின்னால் குடையுடன் நான்!

அடீ, என் மெல்லுடல் காதலீ...
உன்னில் மோதிச் செல்லும்
இந்த தென்றலைத்தான்
என்ன செய்வதென்றுபுரியவில்லை!

மெதுவாகத்தான் வீசுகிறது காற்று

மெதுவாகத்தான் வீசுகிறது காற்று
ஆனாலும்
இலைகளால் இருக்க முடிவதில்லை.

என் கனிந்த இதயத்தை போலவே
உன் பார்வை பட்டதும்
உதிர்ந்து விடுகின்றன.

இலைகளிழந்து நிற்கிற
எனை பார்த்து
கை கொட்டி சிரிக்கின்றன
உனது விழிகள்
இது வசந்த காலமென்று!

My First Blog

Krishna!