Thursday, August 28, 2008

சுட்டெரிக்கும் வெய்யில்

சுட்டெரிக்கும் வெய்யில்
முகத்திலறையும் புழுதிக்காற்று
பழகிவிட்ட வியர்வை வாசனை
பக்கத்து டீக்கடையின்
குத்துப்பாடல்
சுவரோர எச்சில் கறைகள்
காதல் கிறுக்கல்கள்
லேகிய வியாபாரிகள்
காய்கறி கூடைகள்
புத்தகச்சுமைகள்
பரீட்சை பயங்கள்
கடிகார கேள்விகள்
இன்டர்வியு அவசரங்கள்
வழித்தட விசாரணைகள்
விழிப்பரிமாற்றங்கள்
குழந்தைகள் தொலைத்துவிட்ட
ரூபாய் நாணயங்கள்
திருட்டுப்போன சம்பள கவர்கள்...
சுவாரஸ்யமாகத்தான் உள்ளன
நகரப் பேருந்திற்கான
காத்திருப்புகள்...
-Boo

Monday, August 11, 2008

தலையணை நனைய

தலையணை நனைய
முகம் பொத்தி
இரவு முழுக்க
அழுத கண்ணீர்
இன்னும் கரித்துக்கொண்டிருக்கிறது
நினைவுகளாய்...

அத்தனை அழுதும்
அடம்பிடித்தும்
அப்பாவிடமிருந்து
பணம் கிடைக்கவில்லை
பேனா வாங்க.

சின்னு வாங்கின பேனாவை
ஆசையாய் வாங்கி
கணக்கு நோட்டில்
முதன்முதலாய் கிறுக்கினபோது
உணர்ந்த அழுத்தம்
ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது
விரல்களினூடே.

வெள்ளிக்கிழமை
வாங்கித்தருவதாய்
இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா.
இன்னும் மூன்று நாட்கள்.

வகுப்பில் எல்லோரும்
பேனா வாங்கிவிட
என் விரல்கள் மட்டும்
பென்சில் பிடித்து
வீட்டுப்பாடம் எழுத
மறுத்துக்கொண்டிருந்தன.

வியாழக்கிழமை இரவு
தாமதித்து வீடு வந்த
அப்பாவின் முகத்தில்
படர்ந்திருந்த வெறுமை
எனைப் பார்த்து
இன்றும்
பேனா வாங்க மறந்ததாய்
மௌனித்து நின்றது.

எதுவும் பேசாமல்
தலையணையில்
முகம் பொத்தி
அழுத கண்ணீர் இன்னும்...

காலையில்
வீட்டுப்பாடம் எழுத
பென்சில் தேடியபோது
என் கண்ணிர்க் கறை படிந்த
கன்னங்கள் பார்த்து
பரிகசித்து
சிரித்துக்கொண்டிருந்தது,
ஒரு நாள் இரவு முழுதும்
என்னை அழவைத்த
எனதே எனதான
புதிய பேனா!
அருகில்
புன்னகையுடன் அப்பா!!!

பேனாவில்
மை நிரப்பிகொடுத்த
அப்பாவிடம்
அதே கணக்கு நோட்டில்
மென்மையாய்
அவரின் பெயரை
எழுதிக்காண்பித்துவிட்டு

வெள்ளை சட்டைப்பையில்
புதிய பேனாவை
வைத்துக்கொண்டு
வகுப்பில்
அத்தனை பேரிடமும்
காட்டியே தீரவேண்டிய ஆவலில்
மூச்சிரைக்க ஓடி வந்து
பள்ளி நுழைகையில்

இதயத்துடிப்பை
சில கணங்கள் நிறுத்தி,
என் வெள்ளை சட்டையில்
மை கறையை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ மறைந்துபோன
எனதருமை பேனாவை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

-Boo

Sunday, August 10, 2008

கடிதங்கள்

பிள்ளையார் சுழிகள்
சிவமயங்கள்
முனை சந்தனங்கள்
முத்தக்கறைகள்
மைத்தீற்றல்கள்
கண்ணீர் தடையங்கள்
கைரேகைகள்
அடித்தல் திருத்தல்கள்
எச்சில் நனைத்த
அஞ்சல் தலைகள்
அத்தனையும் இழந்து
இறந்துபோய் வருகின்றன
இன்றைய இ-மெயில்கள்.
-Boo

Saturday, August 2, 2008

நீயும் நானும்

வெள்ளிக்கிழமை
கோவில் வாசலில்
மாநிறமாய்
சுருள்க்கூந்தலுடன்
மஞ்சள் புடவையில்
உயரமாய் உனது ஒரு அம்மா...

சனிக்கிழமை
காய்கறிக்கடையோரம்
சற்றே பருமனாய்
பெரிய கண்களுடன்
அழுக்கேறிய சிவப்பு புடவையில்
உனது இன்னொரு அம்மா...

ஞாயிறு மாலையில்
கடற்கரையில்
ஒடிசலாய்
குளிர்க்காற்றில் இருமியபடி
மங்கிய கண்களுடன்
வேறொரு அம்மா...

உனது
அத்தனை அம்மாக்களுடனும்
பசியில்
அழுது ஓய்ந்த
கண்ணீர்க்கண்களுடன் நீ...

எனது
கருணை நாணயங்கள்
உன் பசியையும் கண்ணீரையும்
ஒருபோதும்
போக்கப்போவதில்லை என்றறிந்தும்
உனது அம்மாக்களின் தட்டில்
இரண்டு ரூபாய் வீதம்
உனக்காக
ஆறு ரூபாய் இழந்திருக்கும் நான்...

-Boo