Sunday, December 22, 2013

பலி

இறந்தே போனாள்...

செந்திலுக்கு மனைவியானபின்
அவனுக்குப் பிடித்த
வாழ்க்கயை வாழ்வதில்
தன் சுயத்தை
தொலைத்துவிட்டிருந்தக் கஸ்தூரி
ஒருநாள்...

-Boo

Tuesday, September 10, 2013

ஞானம்

பரிசுச் சீட்டில்
வெற்றி பெற்ற எண்ணின் 
பத்து இலக்கங்கள் 
ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டபோது 
இரண்டாம் இலக்கத்தில் 
சீட்டைக் கசக்கிய 
எனதருகில் இருந்தவரைவிட 
ஐந்தாம் இலக்கத்தில் 
பரிசினை இழந்த நான் 
அதிர்ஷ்டம் அதிகம் உடையவனாய் உணர்ந்து  
அடுத்த குலுக்கலுக்குச் சீட்டு வாங்க
ஆயத்தமானேன்.

- Boo

Friday, October 5, 2012

மரணத்தின் விளிம்பில் ஒரு வேண்டுகோள்


அனுப்புனர்:
குடைக்கம்பியின் மழைத்துளி.
 
பெறுனர்:
குடை உரிமையாளர்.
 
வேண்டுகோள்:
சிலிர்க்கும் மழையை மறுத்து
கறுப்புக் குடைக்குள் நடந்தீர்.
வீடு நுழைகையில்
குடையை உதறி
என் நெடிப்பொழுது வாழ்வை
உங்கள் மிதியடிகளில்
முடித்துவிடாதீர்.
தன் ஆயுள் முழுதும்
எங்களோடு கழிக்கும்
குடையோடு
நான் மரிக்க விரும்புகிறேன்.
உதறாமல் செய்வீரா?

-Boo

Thursday, September 13, 2012

ஞாபக மிட்டாய்


அரைகுறை வெளிச்சத்தில்
கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி இருந்ததில்  
ஏதோ ஒன்றைக் காட்டி
மழழையில் சிணுங்கிய சிறுவனுக்கு
விலை ஏதும் கேட்காமல்
அந்த அப்பா வாங்கிக்குடுத்த 
பொம்மைப்படம் போட்டக் கடிகாரம்,

பீப்பி ஊதிக்கொண்டு
மதிய நேரத்தில்
எங்கள் வீடு கடக்கும் மிட்டாய்க்காரர்,
மூங்கில் கழியின் உச்சியில்
அழுக்குப் பாவாடை அணிந்த
கண்கள் சிமிட்டும் பொம்மைக்குக் கீழே
வெள்ளை-சிவப்பு வர்ணத்தில்
பிசுபிசுக்கும் மிட்டாயில் செய்து
என் வலக்கையில் ஒட்டிவிட்டுப்போன  
அந்த கடிகாரத்தைப் போல்
வருடங்கள் பல கழித்தும்
இனித்துக் கொண்டிருக்குமா?
தெரியவில்லை!

-Boo

Sunday, August 12, 2012

என் உலகம்


கவலைகளும், அவசரங்களும் அற்றது என் உலகம்.

கனவு கலைத்த
கடிகாரத்தின் தலையிலடித்து
எரிச்சலாய் உறக்கம் கலைக்கத் தேவையில்லை.

அவசரமாய் அருந்திவிட்டு
தேநீரின் சூட்டை
வயிற்றில் உணரத் தேவையில்லை.

தலைப்புச் செய்திகளை மட்டும் மேய்ந்துவிட்டு
தினசரிகளை விசிறியடிக்கத் தேவையில்லை.

முதல் வகுப்புப் பெட்டிகளில் கூட
வியர்வை வாசத்தில் பயணிக்கத் தேவையில்லை.

காதலியிடம் காதல் சொல்ல,
தனிமை தேடாமல்
இரைச்சல் பழகிக்கொள்ளத் தேவையில்லை.

சாலை ஓரத்து இரத்தக் கறையை
கவனிக்காமல் செல்லக்
கற்றுக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால்,
நகர நரகத்தின் 
அலுவல அவசரத்தில் 
வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கும் 
சராசரனின் பட்டியலில் 
என் பெயரும் ஒருநாள் எழுதப்படும்.

அதுவரை,
மாதாமாதம் பத்து தேதிக்குமேல்
அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தின் 
நலம் விசாரிப்புகளோடும், 
கடிதத்தின் மடிப்புகளிடையே கிடைக்கும்
சில நூறு ரூபாய் தாள்களோடும்,
என் தேவைகளை தீர்த்துக்கொண்டு,

கவலைகளும் அவசரங்களும் அற்று
சற்றே தாமதித்து இயங்கும்
என் உலகத்தில்
வேலை தேடிக்கொண்டு இருக்கப்போகிறேன்.

-Boo 



Tuesday, July 17, 2012

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்.

ஒருபோதும் தனிமையில் அழுவதில்லை நான்!
என்னுடன் எப்போதுமே அழுகின்றன,
வலிமையின் முன் என் இயலாமையும்,
நம்பிக்கையின் முன் என் ஏமாற்றமும்,
வெற்றியின் முன் என் அவமானமும்,
இன்பத்தின் முன் என் வெறுமையும்,
இருளில் எனைச்சுற்றி நிறைந்திருக்கும்
என் நிழலும்.

கண்ணீர் காய்ந்து போனாலும் 
அது விதைத்து விட்டுச்செல்லும் கசப்பினோடு,
யாருமில்லா கடற்கரையில்  
உப்புக்காற்றின் துவர்ப்பினையும் சுவைத்தபடி,
அழுவது எனக்கு மிகப்பிடிக்கும்.   

- Boo








Tuesday, June 26, 2012

ரணம்

உறவுப் பின்னலில் 
ஒற்றை இழைகள்!
சாயம் போனதுபற்றி
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்,
அறுந்துபோனது தெரியாமல். :(

-Boo