Sunday, August 23, 2009

ஒற்றை நொடிதான் வித்யாசம்

ஒற்றை நொடிதான் வித்யாசம்
என்றாலும்,
எனதருகில் நிற்கிறவன் கைகளில்
வெற்றிகனி.
என் கண்களில்
தோல்வியின் கண்ணீர்.

-Boo

Tuesday, August 11, 2009

நீண்டும் ஒடிந்தும்

நீண்டும் ஒடிந்தும்
சேர்ந்தும் பிரிந்தும்
வளைந்தும் நெளிந்தும்
நின்றும் கிடந்தும்
திரிந்தும் பிணைந்தும்
கிடக்கும்
ஒற்றையடிப் பாதைகள் போன்ற
உன் உள்ளங்கை ரேகைகள் மீது
என் விரல்களால்
ஊர்ந்து கொண்டே இருக்கிறேன்

தயவு செய்து
என்னைத் தொலைத்துவிடு
நான்
வீடு போய்ச் சேரவேண்டும்...

-Boo

Saturday, August 1, 2009

உன் வீட்டுக்கு வழி

உன் வீட்டுக்கு
வழி எது என்று கேட்டேன்

போகும் வழியெல்லாம்
புன்னகை
உதிர்த்துவிட்டுப் போகிறேன்
தொடர்ந்து வா
என்கிறாய்

-Boo

Friday, July 31, 2009

உடைந்து உருவிழந்து

உடைந்து
உருவிழந்து
உன்னைத் தழுவி
மோட்சம் பெறுவதற்காய்
உனதிலைகளின் மீது
விழுந்த என்னை

நீ
வளைந்து
நிலம் நோக்கி
வீழச்செய்தாய்..

இந்த மழைத்துளி
இலைகளின் மேல்
தவம் செய்ய
வரம் வாங்கி
வரவில்லை போலும்
என்றெண்ணி

கண்ணீர் மல்கி
மண்ணைச் சேர்ந்து
நான் மரணிக்கும் போது
உன் வேர்களால்
எனைத் தீண்டி
என் உயிர் மீட்டாய்.

இலைகளில்
வாழ்வதல்ல;
உயிரின்
வேர்களில் வீழ்வதே காதல்
என்றுரைத்தாய்.

நீ என் காதலி!

-Boo

Tuesday, May 5, 2009

இரவுகளில் குளிர்காயும்போது

இரவுகளில்
குளிர்காயும்போது
நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

நீ
விழிமூடி இருக்கும்
பொழுதுகளன்றி
எனை
கூறிய அம்புகளால்
எந்நேரமும் துளைத்து
காயம் செய்துகொண்டிருக்கும்
தருணங்களிலும்...

நெருப்பின்
நாக்குகளைப்போல்
உன் இருள் கூந்தலால்
என் முழுமையும்
தொட்டு...தொடர்ந்து...

உன்
விரல் தீண்டும்
ஸ்பரிசங்களால்
என்
உயிர்த் தொலையும்
கானல் நொடிகளிலும்...

காற்றினை மரிக்கும்
இடைவெளியின் நெருக்கத்தில்
குளிர்காயும் பொழுதுகளிலும்...

நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

-Boo

Monday, April 20, 2009

உயிர்க்கும் துளிர்களை

உயிர்க்கும் துளிர்களை
வசந்தத்திற்க்காய்
ஒளித்து வைத்திருக்கின்றன
குளிர்கால மரங்கள்...

எனது
சொல்லப்படாத வார்த்தைகளும்
உன் மௌனத்தை
கலைப்பதற்க்காய்
கண்களில் நீரோடு
உனைப்போலவே
மௌனித்திருக்கிறது...

இவை
மழைத்துளிகளன்று
மண்ணோடு சேர்வதற்கு.
கண்ணீர்த்துளிகள்.
மண்ணைச் சேரும் முன்னே
காற்றோடு கரைந்து விடுகின்றன...

மரங்களுக்கு
வசந்தங்கள் நிச்சயம்

நீ பேசிடாத
உன் மௌனம் கலைக்க
வசந்தத்தின் தளிர்களாவது
மிக மெதுவாக
வீசட்டும்.

-Boo

Thursday, April 16, 2009

செக்கச் செவேல்

செக்கச் செவேல் செம்மண் பூமியில
பச்சைப் பசேல் வயக்காடு...

அயிர மீனுங்க
அலைஞ்சி திரியிற
வாய்க்கா வரப்பு...

கரும்புத் தட்டைய மேயிர
வெள்ளாட்டுக்கூட்டம்...

குஞ்சுங்கள அணைச்சிக்கிட்டு போற
கோழிங்க கூட்டம்
அதுங்கள அணைச்சிக்கிட்டு போற
சேவக்கூட்டம்...

மழைத்தண்ணி சொட்டுற
ஓலைக்குடிசை திண்ணையில
வெத்தல இடிச்சிக்கிட்டு
பொக்கைவாய் கிழவி...

ஆத்து மணல்ல
மச்சி வீடு கட்டி வெளையாடுற
ஊளை மூக்கு பொண்ணுங்க...

தூரத்து ரயில
தண்டவாளத்துல
காத வச்சி கேக்குற
ஓட்டை டவுசர் பசங்க ...

சமைஞ்சாலும்
கட்டங்கட்டி
பாண்டி விளையாட மறக்காத
தாவணிப் பொண்ணுங்க....

அத்தனையும் பாத்துட்டு
ஆச்சர்யமா கேட்டான்
என் பட்டணத்து சிநேகிதன்

எங்க இருந்துடா
டவுன்லோடு பண்ணுன
இத்தன அழகான ஸ்க்ரீன் சேவருங்களை???

-Boo