Friday, March 28, 2008

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்
கிலோ ஐந்து ரூபாய்க்கு மட்டுமே
விலை போனதாய்
உன் கணவனிடம்
அலுத்துக்கொண்டாய்,
உள்ளிருப்பவை அனைத்தும்
உன்னைபற்றிய
என் கவிதைகள்
என்றறிந்தும்...!

கவனமாய்
சேகரித்திருக்கிறாய்
என் நிழல் கூட இல்லாத
உன் திருமண புகைப்படங்களை.

உறுதிசெய்துகொள்கிறேன்.
உனது எந்தக் குழந்தைக்கும்
எனது பெயரை
வைத்துவிடவில்லை..

நாம் அமர்ந்திருந்த
உனது வரவேற்பறையின்
அமைதியை
ஜன்னல் திரைச்சீலைகள் மட்டுமே
கலைத்துக்கொண்டிருந்தன.

நான் கிளம்பும்முன்
ஏன் தாடி வளர்கிறாய் என்று
எதேச்சையாய் கேட்டாய்...
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்

அன்று
உன் இதழ் பதித்து
உரமிட்ட
என் கன்னங்கள்
இன்று
அமோகமாய்
தாடி வளர்க்கின்றன.


-Boo

Sunday, March 16, 2008

நெடு நேரமாய்...

நெடு நேரமாய்
எனதருகே அமர்ந்து
கன்னத்தில் கை வைத்தபடி
உன் இதழ் பார்த்து
காத்துக்கிடக்கிறது காற்று

அந்த உறைந்த நொடியில்
உன்
இதழ் விரித்து பதில்கிறாய்
"ஆமாம், நானும் உன்னை..."

இருவரின் சம்மதத்துடன்
கையெழுத்தாகிறது
நமது
விவாகரத்துப் பத்திரம்.

Monday, March 10, 2008

இந்திய சாலைகள்

இந்திய சாலைகள்
குழிகள் நிறைந்திருப்பதாய்
குறைகள் சொல்கிறேன்.

Pizza, Burger என்ன விலை?
எழுதி வைத்துக்கொள்கிறேன்.

தாகம் தீர்க்க
தண்ணீர் விடுத்து
Pepsi, Coke கேட்க
பழகிகொள்கிறேன்.

சாலைகளில் இன்னமும்
வலப்பக்கம் செல்லவே தோன்றுவதாய்
அலட்டிக்கொள்கிறேன்.

எங்கும்
தனித்து நின்றாலும் கூட
வரிசையில் நிற்கிறேன்.

வெளியே செல்லும்முன்
வானிலை அறிகிறேன்
உச்சி வெய்யிலிலும்
Jerkin அணிகிறேன்.

ஒரு ரூபாய் சீப்புக்கும்
Deals பார்க்கிறேன்.
தெருமுனை
காய்கறிகாரியிடம் கூட
Sell by date கேட்கிறேன்.

இன்னும்
killometer மறந்து
Mile பழக வேண்டும்.
Petrol விடுத்து
Gas கேட்க வேண்டும்.
எதிரில் யாரேனும் வந்தால்
பத்து Degree யாவது
புன்னகைக்க வேண்டும்.

அடுத்த மாதம் கல்யாணம்.
அமெரிக்காவில்
வேலை பார்ப்பதாய்
பெண் வீட்டாரிடம்
பொய் சொல்லியிருக்கிறேன்.

Sunday, March 2, 2008

பால்ய காலத்து சிநேகிதன்

பால்ய காலத்து சிநேகிதன்
எதிர் வந்த பேருந்தின்
முன் இருக்கையில்,
என்னைப் போலவே.

இருவர் முகத்திலும்
பரவச அலைகள்.

அடுத்த கணம்
அவனுக்கு மிக அருகில் நான்.

அவனும் இறந்து கொண்டிருந்தான்
என்னைப் போலவே.

நான் அவளைக் காதலித்தேன்

நான் அவளைக் காதலித்தேன்
அவளும் என்னைக் காதலித்தாள்
இருவரும் சொர்க்கம் கண்டோம்.
இன்று எங்களுக்கு
ஆறாவது நினைவு தினம்.

Saturday, March 1, 2008

பறந்து பறந்து

பறந்து பறந்து
முளைத்த சிறகுகளும்
முறிந்து போயின.

பால் மறந்த மார்புகள்
இப்போதெல்லாம்
இரத்தம் தர பழகிக்கொன்டன.

மொக்குகள் மலராதிருக்க
காற்றே கைவிலங்கிட்டிருக்கிறது.

என் வெற்றிச் சிறுகதை
தலைப்புடனே
முடிந்து போயிற்று.

ஆனாலும்,
உயிர்த்திருக்கிறது
என் முயற்சி மட்டும்.

என்
முறிந்த சிறகை மீறிய
வானம் கடந்து
திரும்பிப் பார்க்கையில்...
அட!
நட்சத்திரங்களுக்கு நடுவில் நான்!