Monday, April 20, 2009

உயிர்க்கும் துளிர்களை

உயிர்க்கும் துளிர்களை
வசந்தத்திற்க்காய்
ஒளித்து வைத்திருக்கின்றன
குளிர்கால மரங்கள்...

எனது
சொல்லப்படாத வார்த்தைகளும்
உன் மௌனத்தை
கலைப்பதற்க்காய்
கண்களில் நீரோடு
உனைப்போலவே
மௌனித்திருக்கிறது...

இவை
மழைத்துளிகளன்று
மண்ணோடு சேர்வதற்கு.
கண்ணீர்த்துளிகள்.
மண்ணைச் சேரும் முன்னே
காற்றோடு கரைந்து விடுகின்றன...

மரங்களுக்கு
வசந்தங்கள் நிச்சயம்

நீ பேசிடாத
உன் மௌனம் கலைக்க
வசந்தத்தின் தளிர்களாவது
மிக மெதுவாக
வீசட்டும்.

-Boo

Thursday, April 16, 2009

செக்கச் செவேல்

செக்கச் செவேல் செம்மண் பூமியில
பச்சைப் பசேல் வயக்காடு...

அயிர மீனுங்க
அலைஞ்சி திரியிற
வாய்க்கா வரப்பு...

கரும்புத் தட்டைய மேயிர
வெள்ளாட்டுக்கூட்டம்...

குஞ்சுங்கள அணைச்சிக்கிட்டு போற
கோழிங்க கூட்டம்
அதுங்கள அணைச்சிக்கிட்டு போற
சேவக்கூட்டம்...

மழைத்தண்ணி சொட்டுற
ஓலைக்குடிசை திண்ணையில
வெத்தல இடிச்சிக்கிட்டு
பொக்கைவாய் கிழவி...

ஆத்து மணல்ல
மச்சி வீடு கட்டி வெளையாடுற
ஊளை மூக்கு பொண்ணுங்க...

தூரத்து ரயில
தண்டவாளத்துல
காத வச்சி கேக்குற
ஓட்டை டவுசர் பசங்க ...

சமைஞ்சாலும்
கட்டங்கட்டி
பாண்டி விளையாட மறக்காத
தாவணிப் பொண்ணுங்க....

அத்தனையும் பாத்துட்டு
ஆச்சர்யமா கேட்டான்
என் பட்டணத்து சிநேகிதன்

எங்க இருந்துடா
டவுன்லோடு பண்ணுன
இத்தன அழகான ஸ்க்ரீன் சேவருங்களை???

-Boo