Thursday, November 6, 2008

மேகம் நீங்கிய மழைத்துளி

மேகம் நீங்கிய
மழைத்துளி ஒன்று
பயணிக்கிறது
செம்புலம் நோக்கி

திசைகளற்ற பயணம்
இன்னும் நீட்டிக்கிறது
தூரத்தின் நீளத்தை

அலைக்கழிக்கும் காற்று
கேள்விக்குறிகளாக்குகிறது
சென்று சேர்வதற்கான
மழைத்துளியின்
நம்பிக்கையை

தனிமையின் துயரம்...
விரக்தியின் விளிம்பில்
கண்ணீர் சிந்துகிறது
மழைத்துளி

கண்ணீர்த்துளி
மழைத்துளியின்
சுயத்தின்
பிரதிபலிப்பு

இப்போது
மழைத்துளிக்கு
ஆதரவாய்
கண்ணீர்த்துளி

தனிமை தொலைந்த பயணம்
தூரத்தின் நீளத்தை
அர்த்தமற்றதாக்குகிறது

துளிகளில்
துளிர்க்கிறது
நம்பிக்கை
தூரத்தில் தெரிகிறது
செம்புலம்.
-Boo

Monday, November 3, 2008

வனவாசம்

பகல் முழுதும் அலைந்து திரிந்து
இரவு தாமதித்து வீடு சேர்ந்தனர்
ராமனும், லக்ஷ்மனும், சீதா தேவியும்.

களைப்பின் மிகுதியில் ராமன்
கயிற்றுக்கட்டிலில் சயநித்திருக்க...

அரிசி களைந்து
அடுப்பில் இட்டுக்கொண்டிருந்த
சீதாவின் கண்களில் புகைக்கண்ணீர்.

இன்றைய வருமானம்
இந்த வாரத்தின் மிகக் குறைவென
மழையையும் ராமனையும்
அலுத்துக்கொண்டிருந்தான்
லக்ஷ்மணன்.

உதவும் அணில்கள் அற்ற
கடற்கரை சேரியின் உப்புக்காற்றில்
நைந்துபோன கட்டிலின் நைலான் கயிறு,
காலையில் பூசிய நீல வர்ணத்தை அழித்து,
நாளை பற்றிய கவலைகளோடு
தூங்கிக் கொண்டிருந்த ராமனின் முதுகில்
கோடு கிழித்துக்கொண்டிருந்தது...

-Boo