Thursday, July 17, 2008

பூனைபோல்

பூனைபோல்
சப்தமற்று
மிக மெதுவாக
என்னில்
கால் பதிக்கிறது
காமம்.

ஆர்ப்பரிக்கும்
கடலலைபோல்,
காமத்தின் கால்தடங்களை
கண நேரமும்
விட்டு வைப்பதில்லை
காதல்!

தோற்றுப்போன காமம்
கரைந்து போன
கால் தடங்களை
விட்டுவிட்டு
கடலில்
கண்ணீர்த் துளிகளை
கலந்துவிட்டுச் சென்றது.
-Boo

Wednesday, July 9, 2008

நிழல் மண்டிக்கிடக்கிறது

நிழல் மண்டிக்கிடக்கிறது.

இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,

கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,

பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.

-Boo

Saturday, July 5, 2008

எனது கேள்விக்கும்

எனது கேள்விக்கும்
உனது பதிலுக்குமான
நீண்ட
மௌனத்தின் பாதையில்
திசைகளற்று
பயணிக்கிறேன்.

எனது
குறுகி நீளும் நிழல்
மறையும் முன்னே
நமை கடந்து சென்ற
மேகம் தூவிய
தூரலில் நனைந்த
உன் இதழ் கொண்டு
குளிர் வார்த்தைகள் தூவி
எனை வரவேற்பாயா?

-Boo

Sunday, June 29, 2008

இரவில்...

இரவில்
விளக்குகள் அணைத்தபின்
உன் பெயரின்
முதலெழுத்து மட்டும் தெரிய
வருகிறது
தொலைபேசி அழைப்பு...

வழக்கம்போல்
இரவின் நீளத்தை
நீட்டிக்கச்சொல்லி
கடிகாரத்திடம் கண்ணசைத்து

அதுவரை
சேமித்துவைத்த
தனிமையை கலைத்துவிட்டு
பேசத்தொடங்குகிறேன்...

உன்
இதழ் மலரும்
வார்த்தைகளை
கேட்காமல்
அதிகநேரம்
இருக்க முடிவதில்லை
அதனால்
அதிகபட்சம்
ஐந்து வார்த்தைகளுக்குள்
பேசி முடித்து
உன் பதிலுக்காக
காத்துக் கிடக்கிறேன்..

உன்
தனிமையும் தூக்கமும்
கலையாதிருக்க
என் வார்த்தைகளில்
அதிகம்
மெல்லினம் கலக்கிறேன்

பல சமயங்களில்
உனது மௌனம் மட்டுமே
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்னுடைய மெல்லினங்களுடன்...

நம்
காதலை சொல்லும் வார்த்தைகளை
நான் சேமிப்பதே இல்லை.
நீயோ
செலவழிப்பதே இல்லை.

இரவு கடந்து
காலை நெருங்கும்போது
நான்
தீர்ந்து போன
சொற்களோடு
உனக்காக காத்திருக்கிறேன்

கடிகாரம்
எனக்காக
இரண்டு நொடிக்கு ஒருமுறை
நகர்கிறது...

ஒரு
நீண்ட மௌனத்தின்
இடைவெளியில்
விடிகிறது
உன் வெட்கம் தோய்ந்த வார்த்தைகள்.

என் வாழ்வின்
அர்த்தத்தை
மூன்றே வார்த்தைகளில்
மொழி பெயர்க்கிறாய்
நானும் புன்னகையுடன் பதில்கிறேன்
"ஆமாம்...நானும்...."
-Boo

Friday, March 28, 2008

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்
கிலோ ஐந்து ரூபாய்க்கு மட்டுமே
விலை போனதாய்
உன் கணவனிடம்
அலுத்துக்கொண்டாய்,
உள்ளிருப்பவை அனைத்தும்
உன்னைபற்றிய
என் கவிதைகள்
என்றறிந்தும்...!

கவனமாய்
சேகரித்திருக்கிறாய்
என் நிழல் கூட இல்லாத
உன் திருமண புகைப்படங்களை.

உறுதிசெய்துகொள்கிறேன்.
உனது எந்தக் குழந்தைக்கும்
எனது பெயரை
வைத்துவிடவில்லை..

நாம் அமர்ந்திருந்த
உனது வரவேற்பறையின்
அமைதியை
ஜன்னல் திரைச்சீலைகள் மட்டுமே
கலைத்துக்கொண்டிருந்தன.

நான் கிளம்பும்முன்
ஏன் தாடி வளர்கிறாய் என்று
எதேச்சையாய் கேட்டாய்...
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்

அன்று
உன் இதழ் பதித்து
உரமிட்ட
என் கன்னங்கள்
இன்று
அமோகமாய்
தாடி வளர்க்கின்றன.


-Boo

Sunday, March 16, 2008

நெடு நேரமாய்...

நெடு நேரமாய்
எனதருகே அமர்ந்து
கன்னத்தில் கை வைத்தபடி
உன் இதழ் பார்த்து
காத்துக்கிடக்கிறது காற்று

அந்த உறைந்த நொடியில்
உன்
இதழ் விரித்து பதில்கிறாய்
"ஆமாம், நானும் உன்னை..."

இருவரின் சம்மதத்துடன்
கையெழுத்தாகிறது
நமது
விவாகரத்துப் பத்திரம்.

Monday, March 10, 2008

இந்திய சாலைகள்

இந்திய சாலைகள்
குழிகள் நிறைந்திருப்பதாய்
குறைகள் சொல்கிறேன்.

Pizza, Burger என்ன விலை?
எழுதி வைத்துக்கொள்கிறேன்.

தாகம் தீர்க்க
தண்ணீர் விடுத்து
Pepsi, Coke கேட்க
பழகிகொள்கிறேன்.

சாலைகளில் இன்னமும்
வலப்பக்கம் செல்லவே தோன்றுவதாய்
அலட்டிக்கொள்கிறேன்.

எங்கும்
தனித்து நின்றாலும் கூட
வரிசையில் நிற்கிறேன்.

வெளியே செல்லும்முன்
வானிலை அறிகிறேன்
உச்சி வெய்யிலிலும்
Jerkin அணிகிறேன்.

ஒரு ரூபாய் சீப்புக்கும்
Deals பார்க்கிறேன்.
தெருமுனை
காய்கறிகாரியிடம் கூட
Sell by date கேட்கிறேன்.

இன்னும்
killometer மறந்து
Mile பழக வேண்டும்.
Petrol விடுத்து
Gas கேட்க வேண்டும்.
எதிரில் யாரேனும் வந்தால்
பத்து Degree யாவது
புன்னகைக்க வேண்டும்.

அடுத்த மாதம் கல்யாணம்.
அமெரிக்காவில்
வேலை பார்ப்பதாய்
பெண் வீட்டாரிடம்
பொய் சொல்லியிருக்கிறேன்.