Sunday, December 19, 2010

கட்சித் தலைவர்களின்

கட்சித் தலைவர்களின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பொதுக்கூட்ட, மாநாட்டு அழைப்புகள்
மசாலா பொடி விளம்பரங்கள்
திரைப்படங்களின் அமோக வெற்றி
தோழரின் கண்ணீர் அஞ்சலி
தேவனின் வருகை
அத்தனையும் அறிவிக்கும் சுவரில்
இன்னமும் அழியாமல்
'விளம்பரம் செய்யாதே!'
-Boo

தூறலின் துளிகள்

தூறலின் துளிகள்
ஜன்னலில் வரைந்த
நீர்க்கோடுகளை
விரல்களால் தொடர்ந்துகொண்டே
மழைக்கால பேருந்துப்பயணம்...

வழிநெடுக
நீர் நிரம்பிய
குளங்களும் கிணறுகளும்
சிறுவர்களுக்கு
நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்க

பள்ளியில்
மதிய நேர
கணக்கு வகுப்புகளை மட்டும்
கட் அடித்துவிட்டு
கிணற்றில் ஊறிய ஞாபகம்.

டயர் ட்யூபில்
மிதந்த சிறுவன்
பேருந்தை பார்த்து
டாட்டா காட்டுகிறான்

நினைவுகளில் மிதந்துகொண்டு
நானும்
கையசைக்கிறேன்
அனிச்சையாய்!
-Boo

Tuesday, July 6, 2010

தென்றலில் மயிலிறகுபோல்

தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்

என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி

என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்

உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்

மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்

உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!

Monday, June 7, 2010

நம் முதல் சந்திப்பில்

நம் முதல் சந்திப்பில்
மௌனத்தை மட்டுமே
பரிமாறிக்கொண்டதாய்
நினைத்திருந்தோம்

எனது நினைவுகளுக்கு
எட்டாதபடி
உனது வார்த்தைகள்
என் இதயத்தில்
தந்தியடித்துக்கொண்டிருந்தது
-Boo

Friday, June 4, 2010

புடவை வாங்க

புடவை வாங்க
போனதாய் சொன்னாய்
கடைக்காரன் கண்டிப்பாய்
ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்!
பட்டுப்புடவை கடையில்
வண்ணத்துப்பூச்சி!
-Boo

உன் சிரிப்பினில் சிதறும்

உன்
சிரிப்பினில் சிதறும்
சில்லறைகளுக்கு
உண்டா இல்லையா
வரி விலக்கு?
-Boo

எச்சில் தொட்டு

எச்சில் தொட்டு
ஒட்ட வைக்காதே
எந்த அஞ்சல் தலைகளையும்.

உன் இதழ் தொடும்
அந்த தூரத்தில்
மகாத்மாவாய் இருந்தாலும்
மன்னிக்க மறுக்கிறது
மனது.
-Boo